ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் பகுதிக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென அங்குள்ள காவிரியாற்றில் குதித்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் சிறிது நேரத்தில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து அந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்மெண்ட்ஸ் தொழிலாளி வேல்முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து வந்த நிலையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.