மர்மக்குழியை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ததில் வியப்பூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அல் மாரா பாலைவனமானது ஏமன் நாட்டில் உள்ளது. இதன் மத்தியில் ‘பர்ஹட்டின் கிணறு’ என்று கூறப்படும் மர்மக் குழி ஒன்று காணப்படுகிறது. இந்தக் குழியானது 367 அடி ஆழமும் 30 மீட்டர் விட்டமும் உடையது. மேலும் இந்த விநோதமான குழியினுள் செல்வதற்கு என்று வட்டவடிமான நுழைவாயிலும் உள்ளது. இதனை வானில் இருந்து காணும் பொழுது சிறியத் துளை போன்றே தெரியும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை “நகரத்தின் கிணறு என்றும் இதில் பூதம் இருக்கிறது” என்றும் கூறுகின்றனர்.
மேலும் இந்த குகையின் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசும். இந்த நிலையில் இக்குழியை ஏமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 நிபுணர்கள் ஆய்வு செய்வபோவதாக தெரிவித்தனர். தற்பொழுது அவர்கள் குழியினுள் உரிய பொருள்களுடன் துணிச்சலாக இறங்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதில் ” இக்குழியானது நீண்டு காணப்படுகிறது. இது மட்டுமின்றி இங்கு படக்காட்சிகளில் வருவது போல அழகிய நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
குறிப்பாக பாம்புகள், மடிந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தின. அதிலும் நீண்ட காலமாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குகையில் எந்தவொரு பூதமும் இல்லை. இது ஏமன் நாட்டின் வரலாற்றுக்கான இடமாக திகழும் என்று கூறியுள்ளனர். இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம். இந்த குகை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.