ஏமனில் மணிக்கணக்காக நடந்த பயங்கரமான உள்நாட்டு போரில் 144 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏமனின் தலைநகரான சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றபட்டு இதோடு 7 ஆண்டுகள் ஆகியது. மேலும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படை மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
மேலும் சவுதி அரேபியாவின் தலைமையில் கூட்டுபடையினர் வான்வழியிலும் தரைவழியிலும் கிளர்ச்சியாளர்களை தாக்கி வருகின்றனர். தற்போது ஏமனின் வடக்கு பகுதியிலுள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இந்த நிலையில் மரிப் நகரில் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கரமான மோதல் பல மணி நேரங்களுக்கு நீடித்துள்ளது. இந்த போரில் 93 கிளர்ச்சியாளர்களும் 51 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.