இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக உலகத்தில் உள்ள இதற்கான நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் சற்றும் எதிர்பார்க்காத மிகப்பெரிய கொரோனா நோய்த்தொற்றை சந்தித்து வருகின்றோம். இதனால் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். மேலும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு கோவிட் வலைதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வலைத்தளத்தின் மூலமாக ஒரே நாளில் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை எந்தவித குழப்பமும் இன்றி விநியோகம் செய்ய முடிகிறது. மேலும் தொண்டு செய்வதை கடமையாகக் கொண்டு தனது சக்தியையும் மீறி அதிகமான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டு வந்தது. அதன்படி கொரோனாவை கட்டுப்படுத்தும் டி.என்.ஏ. வகை தடுப்பூசியை முதல்முறையாக இந்தியா உருவாக்கியது என்பதை இந்த அவையில் நான் சொல்ல விரும்புகிறேன். அந்த தடுப்பூசியானது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். மேலும் எம்.ஆர்என்ஏ வகை தடுப்பூசியும் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது.
இதனையடுத்து மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தையும் விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். கொரோனா தொற்றின் 2-வது அலை தொடங்கியதும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதன்பின் இந்தியா தனது கடமையை உணர்ந்து மீண்டும் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக உலகமெங்கும் உள்ள இதற்கான நிறுவனங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.