வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெட்டுகாட்டுபுதூரில் ரஹீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் அமீர்கான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அடிக்கடி கட்டிட பணிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது வீட்டு சீரமைப்பு பணிக்காக கூலித்தொழிலாளர்ககளுடன் சிறுவன் அமீர்கான் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஹைட்ராலிக் டிரில்லிங் இயந்திரம் மூலம் மணியன் என்பவரின் வீட்டு கூரையை இடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டின் கான்கிரீட் தளத்தில் அமர்ந்து வேலை பார்த்துகொண்டிருந்த சிறுவன் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனைதொடர்ந்து இடர்பாடுகளில் சிக்கிய சிறுவனை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்க முயன்றுள்ளனர்.
ஆனால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சிறுவன் அமீர்கானின் உடலை மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.