Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அரசிடம் இருந்து…. மீட்கப்பட்ட கலைப்பொருட்கள்…. பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு….!!

பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் பராம்பரிய சின்னங்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் ஐ.நா.சபை பொதுக்கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் இருந்த விலை மதிப்பற்ற கலைப்பொருட்களையும் பராம்பரிய சின்னங்களையும் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்போகிறார். இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் 7,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்தியா அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பழங்கால தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்ததற்கு இந்தியா பிரதமர் மோடி அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஏராளமான சட்டத்திற்கு புறம்பான வர்த்தகம், திருட்டு, கலாச்சாரப் பொருட்கள் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் போன்றோர் உறுதி அளித்துள்ளனர். குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று சிறப்புமிக்க கலைப் பொருள்கள், கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட செம்பு பொருட்கள், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்ணால் செய்யப்பட்ட குவளைகள் போன்றவை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பாக 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரேவந்தா மணல் சிற்பம், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட 157 கலைப் பொருட்களில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் உள்ள 45 கலைப்பொருட்கள், 71 கலாச்சார சின்னங்கள், 60 இந்து மதத்தையும், 16 பௌத்த மதத்தையும், 9 சமண மதத்தையும் சேர்ந்தவையாகும். இவை அனைத்தும் உலோகம், கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்டதாகும். தற்பொழுது உள்ள மோடி ஆட்சியில் உலகம் முழுவதும் உள்ள இந்திய கலாச்சார பொருள்களை மீட்டு கொண்டு வரும் பணியானது தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பாக காலனி ஆதிக்கம் செலுத்தியவர்களால் திருடி செல்லப்பட்ட இந்தியா நாட்டின் கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பழங்கால கலைப் பொருட்கள் ஒன்று மட்டுமே இந்தியாவிற்கு  திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால்  2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 200க்கும் அதிகமான கலைப்பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் சில கலைப்பொருட்கள்  திரும்பி அனுப்பப்படும் நிலையிலும் உள்ளது. இதனை தொடர்ந்து 1976 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 13 கலைப்பொருட்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதிலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் தேசிய தொலைக்காட்சி கூடத்தில் இருந்து 2.2 கோடி மதிப்புள்ள திருடப்பட்ட கலைப்பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆந்திரரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்ரகாண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்தே அதிகமான கலைப்பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

Categories

Tech |