கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ இரக்கம் என்ற மகன் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் லிங்கநாடார் என்பவரின் மகளான கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் தேவ இரக்கம் கனகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கில் தேவ இரக்கத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தேவ இரக்கம் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கு தேவ இரக்கத்திற்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தேவ இரக்கம் தலைமறைவாகிவிட்டார். எனவே காவல்துறையினர் தேவ இரக்கத்தை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த தேவ இரக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.