குலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ”குலாப்” புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் கோபால்பூருக்கும் – கலிங்கப்பட்டினதிற்கும் இடையே நள்ளிரவு கரையை கடக்கும் என்றும், அப்போது 75 கிலோ மீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திராவில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட்டும், தெலுங்கானாவில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.