உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 15 இடங்களுக்கு 63 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் அடுத்த மாதம் 9ஆம் தேதி ஊராட்சி குழு உறுப்பினர், வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதில் மொத்தம் 109 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் பரிசீலனை செய்து 5 வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனையடுத்து 31 வேட்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து வேட்புமனுக்களை திரும்ப பெற்று சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் 6வது வார்டு ஊராட்சி குழு உறுப்பினர், எருமைப்பட்டி 15வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர், 5 ஊராட்சி தலைவர், 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 25 பதவிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனைதொடர்ந்து இவர்களுக்கான சின்னங்களும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஊராட்சி தலைவர்களுக்கான பதவி மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால் அவர்கள் போட்டியின்றி வெற்றிபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மீதமுள்ள 15 இடங்களுக்கு 63 பேர் போட்டியிடவுள்ளனர்.