தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி ஸ்டீபன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணையில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். இவர்களில் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மன்மதன் என்பவரும் ஒருவராகும். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வலது கால் முறிந்த நிலையில் மாவுக் கட்டு போடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுவதாவது, கொலையாளிகளை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அந்த வாலிபர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அந்த வாலிபருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டு எழுந்து ஓட முடியாமல் கிடந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அருகில் சென்று பார்த்தபோது ஸ்டீபன் கொலை வழக்கில் தேடப்பட்ட மன்மதன் என்பதும், இவர் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மன்மதனை உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து மன்மதன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரை மதுரை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன்பின் மன்மதன் மதுரைக்கு அழைத்துச் செல்லப் படுவார் என்பதையும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.