Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிக்கு உதவியா இங்கே இரு” சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோவில் வாலிபர் கைது….!!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் தும்பிபாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பாட்டிக்கு உதவியாக இருப்பதற்காக சிறுமியின் பெற்றோர் அவரை அங்கு விட்டு விட்டு திருச்செங்கோட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சரவணன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது பாட்டி வீட்டில் வைத்து கட்டாய தாலி கட்டியுள்ளார். அதன்பின் இருவரும் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்து இருப்பதாக மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அதிகாரிகள் தும்பிபாடிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, காவல்துறையினர் ஆகியோர் சிறுமியை கட்டாய திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சரவணன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின் சரவணன் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |