உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஒரு நரி மூதாட்டியின் தலை மற்றும் குரல்வளை பகுதியில் கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நரி வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டதால் பொதுமக்கள் கல்யாணியை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி 108 ஆம்புலன்சில் வந்த அவசர சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார், டிரைவர் நீதிபதி உதவியுடன் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூதாட்டி கல்யாணி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கல்யாணிக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின் கிராம மக்கள் திரண்டு வந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த நரியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது நரி அவர்களை கடிக்கப் பாய்ந்ததால் உடனடியாக பொதுமக்கள் அதை அடித்துக் கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நரியின் உடலை எடுத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.