ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கமிஷனர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்தும், 3-வது அலையின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசிரியர்கள் கோமளவல்லி, ஜஸ்டல் ஆண்டனி, சுபாஷ் சந்திரன், வானமாமலை மற்றும் சித்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கு காவல்துறையினருக்கு ரத்த கொதிப்பு பரிசோதனை மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இதில் சித்த மருத்துவ நன்மைகள் பற்றியும் உடல்நிலைக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சத்துக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் காவல்துறையினருக்கு அதற்கு ஏற்றாற்போல் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் ஆயுதப்படை உதவி கமிஷனர் செந்தாமரை கண்ணன் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.