தமிழகத்தில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தரமணியில் உள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதன் பின்னர் பேசிய அவர், மாணவர்களுக்கு அறிவியல் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அறிவுத்திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இயற்கை வேளாண்மை மேம்படுத்த சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையின் படி முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.