ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை அன்று உரையாற்றினார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா ஊடகவியலாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது “உலக நாடுகளின் நலன்களையே முக்கிய நோக்கமாக கொண்டு ஐ.நா. சபை தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஐ.நா.சபை தனது கடமைகளை சரியாக செயல்படுத்தவில்லை.
சான்றாக உலக அமைதி, பாதுகாப்பு, சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பது போன்ற பிரச்சினைகளை கூறலாம். இதனால் ஐ.நா சபையில் அதிலும் அதன் பாதுகாப்பு அமைப்பின் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும் அதில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறுவதற்கான வழியையும் முதல் நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது ஐ.நா.சபையின் புதிய தலைவராக மாலத்தீவின் முன்னாள் அமைச்சரான அப்துல்லா ஷாகித் சமீபத்தில் பதவி ஏற்றுள்ளார். இதனால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு நடந்தால் இந்தியா வரைவு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும்” என்று கூறியுள்ளார். அதிலும் ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா, போர்ச்சுகல் போன்ற நாடுகள் தங்களது ஆதரவுகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது