திமுக மீது எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புவதை நிறுத்தவில்லை என்றால் அவரின் முகத்திரை கிழிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்து வருவதை கண்டிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி ஒன்றை சொல்கிறார். நாங்களெல்லாம் மடிக்கணினி கொடுத்தோம், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறார். மாணவச் செல்வங்களுக்கு டேப்லெட் கொடுப்பதாக சொன்னீங்களே… எத்தனை மாணவச் செல்வங்களுக்கு டேப்லெட் கொடுத்திருக்கீங்க.
இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறீர்களா ? நீங்கள் வந்ததற்குப் பிறகுதான் சமச்சீர் கல்விக்கு அடித்த…. கோடிக்கணக்கான மதிப்பு இருக்க கூடிய பாடநூல்களை தூக்கி எறிந்து விட்டு, அய்யன் திருவள்ளுவரின் படத்தின் மேலேயே ஸ்டிக்கரை ஒட்டி இருக்கக் கூடிய ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது. ரவுடிகள் ராஜ்ஜியம் என்பதில் அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வளவு தூரம் தலைதூக்கியது. ரவுடிகள் எல்லாம் வேறு மாநிலத்துக்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் எது உண்மை ?
தமிழ்நாட்டினுடைய தலைநகரமாக இருக்க கூடிய சென்னையிலேயே மிகப்பெரிய ரவுடிகள் எல்லாம் ஓன்று சேர்ந்து ஒரு மாநாடு போல போட்டு, அதில் ஒரு பிரபல ரவுடி தன்னுடைய பிறந்த நாளுக்காக பட்டா கத்தியை வைத்து கேக் வெட்ட கூடிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்பதை அவர் வசதியாக மறந்திருக்கின்றார்.
தன் மீது இத்தனை தவறுகளையும், தங்கள் ஆட்சி மீது இவ்வளவு களங்கங்களையும், அதிமுக ஆட்சியின் முறைகேடுகளையும் சுமந்து கொண்டு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து அவருடைய முகத்திரையை கிழிக்க கூடிய முயற்சியில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபடும் என அமைச்சர் எச்சரித்தார்.