கடந்த 2017ஆம் வருடம் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள், தங்கம், கோடி கோடியாய் பணம் உள்ளிட்டவைகளுடன் அவருடைய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேருக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 12 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது.
இந்தச் சூழலில் அந்த சமயம் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜியின் பெயரும் அந்த டைரியில் இருந்ததால் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தனக்கு அது தொடர்பாக எந்தவொரு சம்மனும் அனுப்பப்படவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் என்னுடைய பெயர் இருந்ததாகவும், எனக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனக்கு எந்தவொரு நோட்டிசும் அனுப்பப்படவில்லை. அவருடைய டைரியில் எனது பெயர் உள்ளது என்று கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும் பேசியுள்ளார்.