வங்க கடலில் உருவான புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்து சென்றது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, குமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.