Categories
Uncategorized மாநில செய்திகள்

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு… ஐகோர்ட் உத்தரவு ரத்து… சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

ஐஜி முருகன் தனது பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. பெண் எஸ்பி புகாரளித்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ‘விசாகா’ கமிட்டி, இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வந்தது.

ஆனால் இந்த வழக்கை விரைவாக நடத்தவில்லை என கூறியும், வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் பெண் எஸ்.பி சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனுவை ஏற்று, பாலியல் புகார் வழக்கு மற்றும் அது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கானா பெண் காவல்துறை விசாரிப்பதற்கு உத்தரவிட்டது..

இந்த வழக்கு தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு ஐஜி முருகன் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம் தெலுங்கானாவிற்கு இந்த வழக்கை மாற்றிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது..

இந்த சூழலில் இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி நீதிபதி சுபாஷ் ரெட்டி அமர்வில் நடந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே,  தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்கலாம்.. இந்த வழக்கை தற்போது தமிழகத்தில் விசாரிப்பதால் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாக புகார் கொடுத்த பெண் எஸ்.பி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார். எனவே தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் என்பதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாத காரணத்தால் மனுக்கள் அத்தனையும் முடித்து வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

ஐஜி முருகன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, தனது வாதத்தை எடுத்து வைக்க முயன்றபோது, சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது குரல் கேட்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து மனுக்களையும் வரும் 27ஆம் தேதி (திங்கள் கிழமை) ஒன்றாக சேர்த்து பட்டியலிட்டு விசாரித்து அன்று முடிவு அறிவிக்கப்படும் என்று கோரி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து, ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |