சீனாவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு அந்த நாட்டு அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது முதல் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்தியா திரும்பினர். இதனையடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸானது பரவ தொடங்கியது. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமான சேவைகளை அந்நாட்டு அரசு ரத்து செய்தது. மேலும் சீன அரசானது இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியர்கள் சீனாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கு இடையேயான நான்காவது உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை காணொளி மூலம் நடைபெற்றது.
அதில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது “இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் சீனாவிற்கு திரும்ப செல்வது இரு நாட்டு தூதரக நிலைப்பாடு சாராத மனிதாபிமான பிரச்சினையாகும். மேலும் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் தவித்து வருகின்றனர். இதில் உணர்வுபூர்வமானதே மிகவும் முக்கியமாகும். மேலும் தற்போது உள்ள கருத்து வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் வணிக உறவை இந்தியா பின்பற்றி வருகிறது. சான்றாக சீன தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு தொடர்ந்து விசா வழங்கி வருகிறது. எனினும் இந்திய மாணவர்கள் தொழிலதிபர்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு அறிவியல் சாராத அணுகுமுறையை சீனா கடைபிடித்து வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.