சிபா ஆதித்தனாரின் பிறந்தநாளை போற்றும் வகையில் அதிமுக சார்பில் மரியாதையை செலுத்தப்பட்டது.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுடைய 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவருடைய திருவுருவ படத்திற்கு நேற்று முன்தினம் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவருடைய வரலாறு தமிழ் கூறும் நல்உலகம் உள்ளவரை அவருடைய புகழ் நிலைத்திருக்கும். காரணம் தோன்றின் புகழோடு தோன்றுக என்கிற அந்த வரிசையில், தோன்றினால் மட்டும் போதாது தான் தோன்றிய அந்த சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழர் சமுதாயத்திற்கு தன்னால் இயன்றவரை, முடிந்தவரை ஆன வரை உதவிகள் செய்வதோடு மட்டுமல்லாமல், இனிய தமிழாம் அந்த தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற வகையில் மேலை நாடுகள் சென்று அவர் பட்டம் படித்தாலும் கூட, அவருடைய ஒரே எண்ணம் தன்னுடைய இன்னுயிராக இருக்கின்ற தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக அயராது முயற்சி எடுத்து அவருடைய மதிநுட்பத்தில் உருவானதுதான் தினத்தந்தி பத்திரிக்கை.
அந்த தினத்தந்தி பத்திரிகையில் ஒவ்வொரு பட்டி தொட்டி எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற வகையில், பாமர மக்களும் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையிலே இனிய நடையில் எளிய தமிழில் பட்டி தொட்டி எல்லாம் பரப்பிய புகழ் கொண்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள். எனவே தான் இன்றைக்கும் என்னைப் பொருத்தவரை கூட, இங்கே உள்ளவர்கள் பொறுத்தவரை கூட தமிழை நன்கு வாசிக்கின்ற பழக்கமும் தமிழ் நன்கு கற்கின்ற ஒரு பழக்கமும் இருக்கிறது என்று சொன்னால் ஆரம்ப காலத்தில் நம்முடைய தமிழர் தந்தை உருவாக்கிய தினத்தந்தி பத்திரிக்கை படித்ததன் பலனாக தான் எனக்கு அது மிகவும் கை கொடுத்தது.
உண்மையிலேயே நான் பேரவைத் தலைவராக இருக்கும்போது கூட வாசிப்பு அதிகமாக ஒரு பெரிய அளவுக்கு தங்குதடையில்லாமல் வாசிப்பதும், வேகமாக வாசிக்கின்ற அந்தப் பழக்கமும் பொதுவாகவே எனக்கு ஏற்பட்ட பிழை இல்லாமல் பொதுவாக ஏற்படும் என்று சொன்னால் அது நான் சிறு வயதிலேயே தினத்தந்தி படித்த ஒரு அனுபவத்தின் காரணமாக, பழக்கத்தின் காரணமாக எனக்கு அந்த ஒரு நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒரு சட்டமன்ற பேரவை தலைவராக அமைச்சராக இருந்து தன்னுடைய கடமையை சிறப்பாக ஆற்றியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள்.
இன்றைக்கும் கூட வரலாறு பேரவை தலைவர் என்று சொல்லும்போது முக்கியமான வரிசையில்களிலேயே அந்த பேரவை தலைவர் என்கின்ற பொறுப்புக்கு ஒரு கண்ணியம் மாறாமல் எந்தவித ஒரு களங்கமும் ஏற்படுத்தாமல் அந்த பேரவை தலைவர் பொறுப்பை சிறப்பான முறையில் ஆற்றியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு இணையாக சட்டமன்ற பேரவை நடத்திய பெருமை அவருக்கு உண்டு. எனவேதான் அவருடைய புகழை போற்றுகின்ற வகையில் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள், ஐந்து சாலை சந்திப்பிலேயே ஒரு முக்கியமான பிரதான சாலையில் அவருடைய முழு திரு உருவசிலையை திறந்து வைத்தார்கள்.
அதுகூட முதன் முதலிலேயே வந்து சி.பா. ஆதித்தனார் சிலையை வேறு ஓரிடத்திலேயே அமைக்கலாம் என்றார்கள் ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக இங்கு நடந்து வந்து இந்த இடம் தான் சரியான இடம் என்று சொல்லி இந்த இடத்திலேயே தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் சிலை எம்.ஜி.ஆரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அம்மாவின் ஆட்சியிலே அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சொன்னார். தன்னுடைய பெருமையைப் போற்ற வேண்டும் என்ற வகையிலேயே அம்மாவுடைய அரசும் சரி, புரட்சி தலைவரும் சரி தந்தை சி.பா. ஆதித்தனார் அவருடைய போற்ற வேண்டும் என்ற வகையிலேயே அவர் புகழ் போற்றப்பட்டுள்ளது.