தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் பொதுக் கூட்டங்களில் அல்லது ஊர்வலங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல் துறையிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். இதையடுத்து எந்த ஒரு அரசு சுவரிலும் எழுதுதல், தாள்களை ஒட்டுதல், கட்அவுட்டுகள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஆகியவை வைப்பதற்கும் அனுமதி கிடையாது. மேலும் உரிமையாளர்கள் அனுமதி தந்தாலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டவோ கூடாது.இந்த விதிமுறைகளை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.