நாகையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி நாள்தோறும் மழை கொட்டித்தீர்த்த வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி பாதிப்பை கொடுத்து வருகிறது. ஆகையால் நாகை மாவட்ட ஆட்சியர் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொசுக்கள் அதிகம் இருக்கக்கூடிய செடிகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,பொதுமக்கள் தாங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருந்தாலே கொசுக்கள் உருவாகாமல் நோய்கள் பரவாமல் தடுக்கலாம் என்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றார். மேலும் மாவட்ட ஆட்சியருடன் வருவாய் அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோரும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.