Categories
உலக செய்திகள்

“அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறை!”.. சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி..!!

அமெரிக்க கடற்படையின் வரலாற்றிலேயே, முதல் முறை சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகனான சுக்பீர் தூர் என்ற 26 வயது இளைஞர் அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் பணியில் சேர்ந்தவுடன், தங்களது மத வழக்கத்திற்கு ஏற்றபடி, தலைப்பாகை அணிந்து கொள்ள தனக்கு அனுமதி தருமாறு கேட்டிருக்கிறார்.

அதிகாரிகள் முதலில், அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவருக்கு பணி நேரத்தில் தலைப்பாகை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் கடற்படையின் 246 வருட வரலாற்றிலேயே முதல் தடவையாக வழக்கத்திற்கு மாறாக தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், சுக்பீர்  சாதாரண பணியை மேற்கொள்ளும் போது மட்டும் தலைப்பாகை அணியலாம். ஆனால் சண்டை நிகழக்கூடிய பகுதிகளில் பணியாற்றும்போது, தலைப்பாகை அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, சுக்பீர் இந்த கட்டுப்பாட்டை நீக்கக்கோரி தன் பிரிவு தலைமைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

இதற்கு முழு அனுமதி வழங்கப்படவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின், ராணுவத்திலும், விமானப்படையிலும் மொத்தமாக சீக்கியர்கள் சுமார் 100 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு தாடி வளர்க்கவும், தலைப்பாகை அணிந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |