தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பூஸ்டர் ஊசி அவசியம் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால் அதன்பிறகு தடுப்பூசியின் செயல் திறன் நாளடைவில் குறைந்து விடும் என்பதால் பூஸ்டர் எனும் தடுப்பூசி மூன்றாவது தவணையாக போடப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேறியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ,”பூஸ்டர் தடுப்பூசியனது முதல் 2 தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதற்கு எந்த விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் இல்லை. இப்போது தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாக போடுவதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் பூஸ்டர் ஊசியைப் போட ஆரம்பித்தால் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட நேரிடும். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசியும் தேவையற்றது. அதே சமயத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும்.இதனையடுத்து தடுப்பூசிகளை கலந்து போடுவது பற்றி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை சமாளிக்க இது பயன்படும்” என்று அவர் கூறியுள்ளார்.