தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவோடு திமுக போட்டியிட்டு வெற்றிபெற முடியாததால் திமுக அரசு அதிமுகவின் மனுக்களை நிராகரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி வருகிறார்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற திமுகவிற்கு திராணி கிடையாது.
அதிமுக வேட்பு மனுக்களை திமுக அரசு வேண்டுமென்றே நிராகரித்து வருகிறது. திமுக அரசின் அச்சுறுத்தலுக்கு அதிமுக ஒருபோதும் பயப்படாது. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உரிய காரணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். திமுக இதற்கு நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.