வாலிபர் உயிரிழந்த வழக்கில் வெடிமருந்தை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய வீட்டின் முன் பகுதியில் கூரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பணியில் அந்தியூர் சங்கரபாளையத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் வெல்டிங் எந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து வந்த தீப்பொறியானது வீட்டில் வைத்திருந்த வெடிபொருள் மீது பட்டுள்ளது. இதனால் வெடிபொருட்கள் வெடித்து சிதறி வெற்றிவேல் மீது தீப்பிடித்தால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் அவருடன் பணியில் இருந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் செந்தில் போன்றோர் விசாரணை மேற்கொண்டு வெடிபொருள் வைத்திருந்ததாக வீட்டின் உரிமையாளர் தீபன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அவரை கைது செய்ய செய்யக் கோரியும், உயிரிழந்த வெற்றிவேலின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை கேட்டும் அவரது உறவினர்கள் அந்தியூர்-பர்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது “இதுதொடர்பாக மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் வீட்டில் வெடிபொருள் வைத்திருந்ததாக தீபனை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைதொடர்ந்து தீபன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.