சிறுமி திருமணம் குறித்து காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதி அரசு பள்ளியில் 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவரின் தந்தை பெங்களூரில் கட்டிட வேலை செய்து வருகிறார். மேலும் இவருடைய தாயார் பொன்னகரத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் தாயார் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணை சிறுமி தொடர்பு கொண்டு பேசியபோது நல்லம்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் மிஸ்டுகால் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுமியும், சிறுவனும் செல்போனில் பேசி காதல் மலர்ந்தது.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்ததால் கடந்த ஜூலை மாதம் அத்திமரத்தூர் கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் சிறுமி-சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பின் திருமணம் முடிந்த அன்றே சிறுமி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனாலும் சிறுவனுடன் சிறுமி செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை, சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனைதொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து பொன்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறுவன் மற்றும் இருவீட்டாரின் பெற்றோர் என 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.