Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? 5 பேர் தீக்குளிக்க முயற்சி…. கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் ரமேஷ்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கின்றார். இதில் ரமேஷ் வெள்ளிப்பட்டறை தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் மகள் சரண்யா ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரமேஷ் கூறியதாவது “என் மீது கடந்த 2010-ஆம் ஆண்டு குற்றவழக்கு இருந்த நிலையில் தற்போது திருந்தி வெள்ளிபட்டறையில் பணி செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாகவே ரவுடிகளை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நான் குடும்பத்தினருடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தேன்”என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தாமரை என்பவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இவரும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் செந்தாமரை கூறியபோது “குடும்ப பிரச்சனை காரணமாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கின்றோம். இந்நிலையில் என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவரிடம் பணம் கேட்டேன். ஆனால் என் கணவர் உட்பட சிலர் என்னை திட்டி அனுப்பி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்” என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மேட்டூர் சின்னகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அதன்பின் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அசோகன் கூறியதாவது “நான் என்னுடைய வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு பல வருடங்களாக விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் இதுவரை வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி குடிநீர் இணைப்பு பெற சிலர் பணம் கேட்கின்றனர். இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக இங்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி உட்பட 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |