திராவிட தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் முருகேசன், நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், ஆதிதிராவிடர் நலத் துறையால் பட்டியலின வகுப்பில் சேர்ந்த இந்து அருந்ததிய மக்களுக்கு சேரன்மகாதேவி சேரன் கோவில்பத்து பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே அவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மற்றொரு மனுவில், அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் கடந்த 25-ஆம் தேதி தூக்கில் தொங்கி இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.