பேருந்தில் செல்பவர்களிடம் இருந்து நகைகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் குதக்கொட்டை அடுத்துள்ள ஈசுப்புளிவலசை பகுதியில் கோபாலன் என்பவர் அவரது மனைவி பூமயிலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பூமயில் சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்கு ராமநாதபுரம் சென்றுள்ளார். இதனையடுத்து பேரனை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் குழந்தையை பரிதாபப்பட்டு பூமயில் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு மூதாட்டியிடம் இருந்து குழந்தையை வாங்கிகொண்டு அந்த பெண் உள்பட 2 பெண்கள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். இதற்குப்பின்னர் வீட்டிற்கு சென்ற பூமயில் கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 61/2 பவுன் தங்க சங்கிலி காணமல் போயிருந்துள்ளது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் குழந்தையை கொடுப்பதுபோல் கொடுத்து அந்த 2 பெண்கள் சங்கிலியை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டி ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த கடந்த 2 மாதங்களாக இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேருந்தில் நகைகளை திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.