பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுமாறு மாணவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் 175 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்த காரணத்தினால் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. அதன்பின் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட காரணத்தினால் மழைநீரை அகற்ற வேண்டும் என மாணவ-மாணவிகள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடம் பேசி, மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தாசில்தார் வெற்றி குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கின்ற மழை நீரை வெளியேற்ற வடிகால்வாய் ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தற்காலிகமாக கால்வாயை தூர்வாரி பள்ளி வளாகத்தில் இருந்து தேங்கி நிற்கின்ற மழை நீரை வடிய வைத்து, மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.