உள்ளாட்சி தேர்தலில் சரியான ஏஜென்ட்டை அமர்த்தி விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும் முக்கியமான தேர்தல்… மக்களோடு நெருங்கி பழக கூடிய ஒரு அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அந்த உள்ளாட்சி அமைப்பில் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், வேட்பாளர்களும் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். இது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாக்கையும் நமக்கு விழக்கூடிய வாக்குகளாக பதிவு செய்ய வேண்டும். அதேபோல தேர்தல் நேரத்தில் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சரியான ஏஜென்ட்டை அமர்த்தி விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.
கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் 10 ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுவார்கள். அதேபோல தேர்தல் முடிந்த பிறகு வாக்கு மையத்திற்கு பெட்டியை கொண்டுபோய் வாக்கு எண்ணுவார்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில், அங்கே அந்த பணியில் ஈடுபட்டிருக்கின்ற நம்முடைய கழக பொறுப்பாளர் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.
நம்மை குழப்புவதற்கு, கவனத்தை திசை திருப்புவதற்கு ஏதாவது பிரச்சினைகளை கிளப்புவார்கள். அப்போது நீங்கள் கவனத்தில் மாறிப்போய் இருந்தால் ஓட்டு எண்ணுகின்ற இடத்திலிருந்து கள்ள ஓட்டை தூக்கிப் போட்டு விடுவார்கள். நமக்கு விழுந்த ஓட்டை, அவருக்கு விழுந்த மாதிரி தூக்கிப் போட்டு விடுவார்கள். நாம கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகிவிடும்.
அதனால் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் நம்முடைய வேட்பாளரும், அவரை சார்ந்த பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் கவனமாக இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் கழக நிர்வாக தொண்டர்கள் திரளாக இருந்து நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என எடப்பாடி பேசினார்.