நியாயமான தேர்தல் நடத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
சேகர் ரெட்டியின் டைரியில் பெயருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவரே தெளிவுபடுத்திவிட்டார். ஊடகங்கள் தான் இதைப் பெரிதுபடுத்துகிறது. பொதுவாகவே இந்த மாதிரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. ஊடகங்கள் தான் எதோ நோட்டீஸ் கொடுத்த மாதிரி சொல்கிறார்கள். இதை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மறுத்து விட்டார்கள். இந்த கேள்வியை செந்தில் பாலாஜி, அணில் பாலாஜியிடம் தான் கேட்கவேண்டும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற கூட்டத்தில் தெளிவாக சொன்னோம். பொதுவாகவே திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் போது அராஜகம், ஜனநாயக விரோத செயல் அத்தனையும் கட்டவிழ்த்துவிடும். அதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள். அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றது.
சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் 89 வார்டு மறு தேர்தல் எல்லாம் நடந்த வரலாறு எல்லாம் உண்டு. 2006ஆம் ஆண்டு காலகட்டத்தில் நீதிமன்றம் கண்டனத்திற்கு எல்லாம் அந்த அரசு உட்பட்டது. அந்த மாதிரி வந்து மறுபடியும் ஜனநாயக விரோத செயல்களுக்கு உடன் படாதீர்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்லிட்டு வந்தோம்.
ஆனால் இன்றைக்கு என்ன ஆச்சு ? வேலூரில் ஒரு வேட்பாளர் திருமதி அம்பிகா அந்த வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக கையெழுத்து வாங்கிவிட்டு அவருடைய வேட்புமனுவை முடித்துவிட்டார்கள். இதுபோல கள்ளக்குறிச்சியில் 6 வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்திருக்கிறார்கள் என்று சொல்லும் போது கிட்டத்தட்ட எந்த அளவிற்கு மக்களை சந்தித்து அதன் மூலம் ஒரு நியாயமான தேர்தல் நடத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என விமர்சித்தார்.