எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நியாய விலை கடை கட்டப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பொதுமக்கள் வசதிக்காக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர, “எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க மறுக்கிறார்கள். ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்று காழ்ப்புணர்ச்சி கிடையாது.
இதனை சட்டப்பேரவையில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். கடந்த பத்து வருடங்களில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கூட எதிர்க்கட்சியினரை நாங்கள் மதித்து நடந்தோம். சட்டமன்ற தேர்தலில் 500 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் எந்தெந்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும். முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே அவர் நிறைவேற்றி உள்ளார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்