தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமுலில் இருந்தபோது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆனால் அரசு பணி ஊழியர்களுக்கு மட்டும் பணி பாதுகாப்பும் மற்றும் சம்பளத்திலும் எவ்வித பிரச்சினையும் இல்லை. கொரோனாவை காரணமாக காட்டி சரண்டர் மற்றும் ஜிபிஎப் போன்ற சலுகைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா பரவல் சற்று குறைந்த போதும் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மதுரையில் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தலைமையில் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் மாநில மாநாட்டை வருகின்ற டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடத்த முடிவு செய்துள்ளனர். இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆகியும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் காலியான 4,00,000 பணியிடங்களை நிரப்ப மற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்குவது போன்ற கோரிக்கைகளை மாநாட்டில் முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.