குடி போதையில் வாலிபர் ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரம் காவல் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் காவல்துறை அதிகாரியான சதீஷ்குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற வாலிபர் குடிபோதையில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியான சதீஷ்குமாரை, அந்த வாலிபர் பிளேடால் வெட்டி விடுவேன் என்றும், ரோந்து பணிக்கு வரும்போது கொலை செய்து விடுவேன் என்றும் நேருக்கு நேராக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரியான சதீஷ்குமார் கார்த்திக்கை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபர் காவல்துறை அதிகாரியை மிரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.