தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்பாளராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, விசிக தலைவர் திருமாவளவனை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதன் தொடர்பாக தமிழிசைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி எம் .தண்டபாணி தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த வேளையில் தமிழிசை சௌந்தராஜன் தரப்பிலும், தாடி கார்த்திகேயன் தரப்பிலும் எவரும் ஆஜராக வில்லை. பின்னர் நீதிபதி அரசியல் சாசன பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும் அதற்கான கட்டுப்பாடுகளையும் கொடுத்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டிய அவர், இந்த வழக்கானது அரசியல் விளம்பரத்திற்காகவே தொடரப்பட்டதாகும். தமிழிசை சௌந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவரின் வழக்கை ஏற்க இயலாது என கூறி இந்த வழக்கை ரத்து செய்துள்ளார்.