தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “உச்சநீதி மன்றமானது உள்ளாட்சித் தேர்தலை நான்கு மாதங்களில் நடத்துவதற்கு ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளதால், இங்கு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் குடிநீரில், பாதாள சாக்கடை தண்ணீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தகளில் எவ்வித முறைகேடுகளும் இல்லாத நிலையில் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரவுடிகளை அடக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார். அதுபோல் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார். இந்த செயலானது வரவேற்பிற்கு உரியதாகும்” என பேசியுள்ளார்.