தீப்பெட்டி தொழிற்சாலை மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அப்பாவு நகர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பாப்பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பூர்ணிமா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கார்த்தி மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து செல்போனில் தனது மனைவி பூர்ணிமாவிடம் தான் விஷம் குடித்து விட்டதாகவும் தான் இறந்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்தி தன மனைவியிடம் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்குமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இந்நிலையில் பாப்பாரப்பட்டி தர்மபுரி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் உள்ள வயல் பகுதியில் கார்த்தி விஷம் குடித்து பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.