தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் ஜவ்வரிசி உற்பத்தியாளர் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் உரையாடினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசனாது ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மேலும் தமிழக அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றி வருகிறது. இன்றைய ஆட்சி காலத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவதே முக்கியமான கொள்கையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையானது இந்தியாவிலே வேறு எங்கும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் ஜவ்வரிசி உற்பத்தியாளர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். தமிழகத்தை தொழில் தொடங்க உகந்த மாநிலமாக மாற்றும் வகையில் புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகமானது இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்றுமதி கொள்கையானது அமைக்கப்பட உள்ளது. ஏற்றுமதி மையங்களான திருப்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட 10 பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.