தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இளைஞரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் ஜெயபிரபா 2வதாக கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஜெயபிரபா கோபித்துக்கொண்டு பிள்ளையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களாக தினேஷ் வீடு பூட்டி இருந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜெயபிரபாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து ஜெயபிரபா அவரது பெற்றோருடன் வீட்டிற்கு சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர்.
அங்கு வீட்டின் அறையில் தினேஷின் உடல் அழுகிய நிலையில் அவர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தினேஷ் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜெயபிரபா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.