3 மாதங்களாக சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நரசிங்கர் குளம் பகுதியில் கணவன்- மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் காலையில் சிறுமியின் தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவார். இதேபோன்று சிறுமியின் தாயும் வீட்டு வேலைக்காக வெளியில் சென்று விடுவார். இதன் காரணமாக வீட்டில் சிறுமி தனியாக இருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பச்சியப்பன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு கணவன்-மனைவி இருவரும் வேலைக்காக சென்றுள்ள நேரத்தில் சிறுமியிடம் பச்சியப்பன் பேச்சுக் கொடுத்து வந்துள்ளார்.
மேலும் நாளடைவில் பச்சியப்பன் சிறுமிக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்களை கொடுத்து அவரை கடந்த 3 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனிடம் பச்சியப்பன் நைசாக பேசி வீட்டுக்கு முன்பு காவலுக்கு வைத்துள்ளார். இதற்காக அந்த சிறுவனுக்கு பச்சியப்பன் 10 ரூபாயும், தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி சிறுவனும் வீட்டிற்கு வெளியில் காவலில் நின்றதால் இதை பயன்படுத்தி பச்சியப்பன் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, முதியவர் அத்துமீறி சிறுமியிடம் நடந்து கொள்வது தெரியவந்தது.
இதனால் அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியிடம் பேசி செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இவ்வாறு முதியவரும், சிறுவனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதங்களாக இந்த கொடூர சம்பவம் நடந்து வந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சிறுமியை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி காவல்துறையினரிடம் கூறியதாவது “தன்னை 3 மாதங்களாக 74 வயது முதியவரும், 13 வயது சிறுவனும் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்றும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அழுது கொண்டே கூறினார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் முதியவர் பச்சியப்பன் மற்றும் 13 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முதியவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 10 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.