தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகத்தில் பணி புரியும் பலருக்கு லஞ்சம் பரிசுப்பொருட்கள் மூலமாகவோ பணம் மூலமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. ஆகையால் சென்னையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய தீயணைப்பு துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ராஜேஷ் கண்ணா என்ற தீயணைப்பு துறை தலைமை அதிகாரியிடம் கணக்கில் காட்டப்படாத ரூபாய் பத்தாயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதே அலுவலகத்தில் சுரேஷ் என்ற நபர் கையில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். அதனையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின் அதற்கான காரணத்தைக் கேட்டபோது தான் அதே பகுதியில் பட்டாசு கடை வைப்பதற்கு ராஜேஷ்கண்ணா ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் அதைத்தான் அவரிடம் வழங்க வந்ததாகவும் கூறினார். ராஜேஷ்கண்ணாவிடம் விசாரித்த பொழுது அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.