இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதது.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் நீட் எனப்படும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 3 ஆயிரத்து 862 மையங்களில் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
மேலும் இத்தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது கடந்த 12ஆம் தேதி நடத்தப்பட்ட நீர் தேர்வின்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 8 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 18 வயது மாணவி தினேஷ்வரி குமாரி, கண்காணிப்பாளர் ராம் சிங், மையத்தின் பொறுப்பாளர் முகேஷ், உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர்வு எழுதும் மாணவர்கள் சட்டவிரோதமாக ஆதாயம் அடைவது அநீதி. எனவே மத்திய கல்வி துறை அமைச்சகம் சரியான வழிகாட்டி முறைகளை பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மாணவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் சோதனை நடத்தி அவர்களை வெளிப்படை தன்மையுடன் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். எனவே முறைகேட்டுடன் நடத்தப்பட்ட இந்த தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.