17 வயது மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு முகநூல் மூலம் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் நாகராஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நாகராஜ் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
அதன் பின் அந்த மாணவிக்கு நாகராஜ் தாலி கட்டி தனது வீட்டில் வாழ தொடங்கியுள்ளார். மேலும் நாகராஜ் அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் நாகராஜிடம் இருந்து தப்பித்து சென்ற அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மகளிர் காவல் துறையினர் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.