பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஒருவர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை கிரிஜா ராணியின் அருகில் நிறுத்தி அந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் கிரிஜா ராணி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அங்கு இருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கிரிஜா ராணி கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.