சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 20 மாகாணங்கள் இருளில் உள்ளன. இந்த நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக சீனா மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. அதிலும் பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் பல பேர் அதிகமான மின்சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தில் மின்வெட்டு அதிகமாக அமல்படுத்தப்படும். இதன்படி ஒரு நாளைக்கு 8 தடவை என்கிற வகையில் தொடர்ச்சியாக 4 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இந்த மின்சார துண்டிப்பால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த மின்வெட்டானது வடகொரியாவில் வாழ்வதை போல உள்ளதாக அங்குள்ள மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த மின்வெட்டு காரணமாக அங்குள்ள சிறு-குறு கனரக தொழிற்சாலைகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் உற்பத்தி தடைபட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து சீனாவில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனை சர்வதேச விவகாரமாக மாறி வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது உள்ள இந்த நிலையானது மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று உலக அளவில் உள்ள முதலீட்டு வங்கியும் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.