சிறுமியை திருமணம் செய்துகொண்டு தாக்கிய இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அப்பிப்பட்டியில் ஈஸ்வரன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஈஸ்வரன் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியின் வயதை உறுதிபடுத்திய மருத்துவர்கள் உடனடியாக இதுகுறித்து தேனி குழந்தைகள் நல அலுவலர்களுக்கும், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து கர்பிணியாக உள்ள சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.