மருமகளை கத்தியால் குத்தியதை அடுத்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு நகரம் போகாதி பகுதியில் மாதேவி என்பவர் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளத்தில் மாதேவியின் மகன் மற்றும் மருமகள் வேதவதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மாதேவியின் மகன் 2 பேரையும் சமாதானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மாமியார்-மருமகள் இடையில் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த மாதேவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வேதவதியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதனால் வேதவதியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் ஓடி வந்தார்.
அப்போது அங்கு கத்திக் குத்துபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேதவதியை அவருடைய கணவர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபத்தில் மருமகளை கத்தியால் குத்தி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் மாதேவி இருந்து வந்தார். மேலும் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சமும் மாதேவிக்கு இருந்தது. இதன் காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாதேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைதொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வந்த மாதேவியின் மகன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.